மாணவர் போராட்டம்
முதலில் இலங்கை, அடுத்து வங்கசேதம், இப்போது நேபாளம். அடுத்தடுத்து அண்டை நாடுகளில் நடந்த மாணவர் போராட்டத்தால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கையில் 2022ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மிருக பலத்துடன் பதவியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் வேறுவழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்தனர்.
இடைக்கால அரசாக ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதை தொடர்ந்து வங்கதேசத்தில் நடந்தது மாணவர் போராட்டம். 2009ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமர் பதவியில் இருந்தவர் ஷேக் ஹசீனா. வங்கதேச தந்தை என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர். 2018ம் ஆண்டு உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஷேக் ஹசீனாவும் ஒருவர். விதி வலியது. 2022ல் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட மாணவர் எதிர்ப்பு அலை, 2024ல் தீவிரமானது.
பயங்கர வன்முறையால் 2024 ஆகஸ்ட் 5ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். இன்றுவரை தலைமறைவு வாழ்க்கை தான். அடுத்ததாக நேபாளம் இன்று கொதித்துக்கொண்டு இருக்கிறது. அப்படி என்ன நடந்து விட்டது நேபாளத்தில்?. ஆன்லைன் சூதாட்டம், பண மோசடி வழக்குகளால் அதிருப்தி அடைந்த நேபாள நாட்டு நீதிமன்றம் இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேபாள நாட்டு சட்டப்படி அனைத்து இணையதளங்களும் பதிவு செய்ய 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாத பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 26 இணைய தளங்களை செப்.5ம் தேதி முடக்கியது நேபாள அரசு. அவ்வளவு தான் ஆத்திரம் கொண்ட இணையதள இளைஞர்கள் இன்று நேபாள வீதியில் குவிந்து விட்டார்கள். ஜென் இசட் என்று அழைக்கப்படும் இன்றைய மாணவ தலைமுறையினர் பற்ற வைத்த தீயால் 2 நாளாக நேபாளம் எரிந்து கொண்டு இருக்கிறது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இணையதள தடையை நீக்கிப் பார்த்தார். போராட்டம் அடங்கவில்லை.
இன்னும் வலுப்பெற்றது. பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டது. பல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓட்டம் பிடித்தனர். வேறுவழியில்லாமல் பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் கடைசியில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கியிருக்கிறார். இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மாணவர் போராட்டத்தால் 3 அரசுகளின் பதவி காலியாகி இருக்கிறது. இணையதளத்திற்கு தடை விதித்தாலும் கூட ஒரு பிரதமர் பதவி விலக வேண்டுமா என்று கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் நேபாளம் வழங்கியிருக்கிறது.
இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை, 17.50 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசம், 3 கோடி மக்கள்தொகை கொண்ட நேபாளத்திலும் மக்கள் புரட்சி, மாணவர் புரட்சி வெடித்து இருக்கிறது. அநீதியை கண்டு, ஊழலை கண்டு, சர்வாதிகார மனநிலையை கண்டு மக்கள் கொத்தளித்து இருக்கிறார்கள். மக்கள் புரட்சி, மாணவர் புரட்சிக்கு முன்பு அனைவரும் தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு. அதைத்தான் இந்த போராட்டங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றன.