சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தது. முதல் பகுதியாக, முதல்வரின் காலை உணவுத் திட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து, நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், அரசு பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் பங்குபெற்ற விழா நடந்தது.
மேலும் திட்டங்களால் பயன்பெற்றவர்கள், சாதித்தவர்கள், துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கல்வியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்கிவரும் அகரம் பவுண்டேஷனுக்காக நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரது சார்பில் அவரது தந்தை சிவகுமார், இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா உள்ளதாக மாணவி கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
மாணவி கண்ணீர் மல்க பேசிய 24 மணி நேரத்துக்குள் வீடு ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித் தரப்படும். எத்தனையோ பேரின் எதிர்ப்பை மீறி படிக்க வைத்த தந்தையிடம் முதல் மாத சம்பளத்தை தந்து மகிழ்ச்சி அடைந்தீர்கள். ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை மாணவி பிரேமாவுக்கு இனி வேண்டாம். புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.