காதல் தகராறில் மாணவி பிளேடால் கழுத்தறுத்து கொலை: மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
திருமலை: காதல் தகராறில் மாணவியை கழுத்தறுத்து கொன்ற மாணவன், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அசோக்(19). இவரும் அதே பள்ளியில் படித்து வந்தார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் ஒரே பள்ளியில் படிப்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அடிக்கடி இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியை காதலிப்பதாக அசோக் கூறியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அசோக்கை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தசரா விடுமுறைக்காக வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சிறுமி சென்றார். நேற்று உறவினர்கள் அனைவரும் அங்குள்ள கோயிலுக்கு சென்றனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அசோக், அங்கு சென்று சிறுமியிடம் பேச வேண்டும் எனக்கூறி வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்து சென்றுள்ளார். பனசபாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்து சென்ற அசோக், சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசோக், சிறுமியின் கழுத்தை தான் வைத்திருந்த பிளேடால் அறுத்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிய அசோக், ஹுசைன்புரம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது செல்போன் அழைப்புகளை வைத்து இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.