12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞரை கைதுசெய்து போலீசார் விசாரணை
ராமேஸ்வரம்: 12ம் வகுப்பு மாணவி ஷாலினி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் முனிராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி இவர் ராமேஸ்வரம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். இதை தொடர்ந்து முனிராஜ் அந்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி உள்ளார். சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவ பரிசோதனையில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஷாலினியை கொலை செய்த முனிராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து முனிராஜிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்பு முனிராஜ் மீது என்னென்ன வழக்குகள் பதிவு செய்யப்படும் என்பதும் தெரியவரும். மாணவியை பின் தொடர்ந்து முனிராஜ் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகியது. இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.