இருக்கை ஒதுக்கி தருவதாக கூறி அத்துமீறல்; ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு
திருமலை: இருக்கை ஒதுக்கி தருவதாக கூறி ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் முன்பதிவு முடிந்ததால் அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் 31 ஆக இருந்தது. என்றாலும் எப்படியாவது கல்லூரி சென்றுவிட வேண்டும் எனக்கருதிய மாணவி, அன்று மாலை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் (டிடி) முன்பதிவு கிடைக்கவில்லை. பயண நேரம் சுமார் 8 மணி நேரம் ஆகும் என்பதால் தனக்கு உதவி செய்யுங்கள் எனக்கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அவர், உங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்படும் வரை எஸ்.7 இருக்கையில் அமரும்படி கூறினார். அந்த இருக்கை டிக்கெட் பரிசோதகருக்குரியதாகும். அதன்படி அந்த இருக்கையில் அமர்ந்து மாணவி பயணம் செய்தார். மேலும் முன்பதிவுக்குரிய அந்த பெட்டியில் குறைவாகவே பயணிகள் இருந்தனர்.
இந்தநிலையில் டிக்கெட் பரிசோதகர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மாணவியின் அருகில் வந்து உட்கார்ந்தார். தன்னை அபிஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் இருக்கையை பற்றி கவலைப்பட வேண்டாம். இருக்கையை நான் உறுதி செய்து தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு மாணவியிடம் அன்பாக பேசியபடி வந்துள்ளார். சிறிது தூரம் சென்ற நிலையில் மாணவி தூங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட டிக்கெட் பரிசோதகர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அப்போது அந்த பெட்டியில் பயணிகள் யாரும் இல்லை.
இந்நிலையில் ஒரு நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது இந்த பெட்டியில் சில பயணிகள் ஏறினர். இதனால் மாணவி நிம்மதி அடைந்தார். அதன் பிறகு ஏசி பெட்டியில் சீட் தருவதாக கூறி மாணவியை அழைத்துச் சென்றார். அந்த பெட்டியிலும் குறைந்தளவே பயணிகள் இருந்துள்ளனர். இதனால் மாணவி இருக்கையில் படுத்து தூங்கியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த டிடி அபிஜித், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் வரும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி சென்றுவிட்டதால் அந்த பெட்டி காலியாக இருந்தது. இதனால் என்ன செய்வது என அறியாமல் மாணவி தவித்தார்.
விஜயவாடாவின் புறநகர் பகுதியில் ரயில் நின்றதும் டிடி அபிஜித் கழிப்பறைக்குச் சென்றார். அப்போது மாணவி அந்த பெட்டியில் இருந்து இறங்கி பயணிகள் அதிகம் இருந்த பெட்டிக்கு சென்று நடந்த சம்பவத்தை அங்குள்ள பயணிகளிடம் தெரிவித்தார். பின்னர் சக பயணிகள் உதவியுடன், விஜயவாடா ஜிஆர்பி அதிகாரிகளிடம் மாணவி புகார் கொடுத்தார். இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு டிடி அபிஜித்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் இதையறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று பீமாவரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.