மாணவி கர்ப்பமான விவகாரம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகை
ஸ்ரீவைகுண்டம் : மாணவி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக ஸ்ரீவை அருகேயுள்ள தனியார் பள்ளியை மாணவியின் உறவினர்களும் ஜமாத் நிர்வாகிகளும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மணிகண்டன் என்பவர் கணித ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக எழுந்த புகாரையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில் அந்த மாணவி தற்போது பிளஸ் 2 படித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிகண்டன் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ரத்னசங்கர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.