‘ஏ....ங்க.... எங்க ஸ்கூலுக்கு வாங்க....’ கூமாபட்டி ஸ்டைல் ரீல்ஸ் மூலம் மாணவர் சேர்க்கை
*கொடைரோடு அருகே அசத்தும் அரசு பள்ளி
நிலக்கோட்டை : கொடைரோடு அருகே அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கூமாபட்டி ‘ஏ...ங்க...’ ஸ்டைலில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5வது ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் வரும் அக். 2ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைவரும் போற்றிப் புகழும் இந்த வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எத்தகைய பயன் அடைகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் விஜயதசமி மாணவர் சேர்க்கைக்கு ‘கூமாபட்டி ரீல்ஸ்’ ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
‘‘ஏ....ங்க... இங்க பாருங்க.. அரசு பள்ளிங்க நம்ம தமிழ்நாடு அரசு பள்ளிங்க.. எல்லோரும் வாங்க..
ஏ....ங்க... இங்க பாருங்க.. பள்ளியில எவ்வளவு பெரிய டிவி இருக்கு பாருங்க..
ஏ....ங்க... இங்க பாருங்க.. பள்ளியில கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க..
ஏ....ங்க... இங்க பாருங்க.. பள்ளியில காலை உணவு திட்டம் சிறப்பா இருக்கு பாருங்க..
ஏ....ங்க... இங்க பாருங்க.. பள்ளியில வகுப்பறையெல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க..’’
என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் நகைச்சுவை கலந்த அசைவுகளோடு தங்கள் குரலில் வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.