உயிரின் போராட்டம்
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா தனது 19 வயதில் கடந்த 2008ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையை தொடங்கினார். 2017ம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சவூதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2020ம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஜூலை 16ம் தேதியான இன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி அனுமதி அளித்தார்.
வேறு வழியில்லை, ஓரளவுக்கு மேல் எங்களால் தலையிட முடியவில்லை என்று மோடி அரசு கைவிரித்தாலும், கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நிறைவேற்றப்பட இருந்த நிமிஷாவின் தூக்கு தண்டனை காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொலை செய்யப்பட்ட மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ளட் மணி அல்லது தியா எனப்படும் நஷ்டஈட்டை பெறுவதற்கு மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மரண தண்டனை ரத்து செய்யப்படும். மரண தண்டனையை ஒத்திவைப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி மன்னிப்பு பெறுவதற்காக மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.
அந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்தால் மட்டுமே நிமிஷா பிரியா உயிர் காப்பாற்றப்படும். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் நிமிஷா பிரியாவின் கணவர் மற்றும் மகள், குடும்பத்தினர் தவித்த நிலையில் உள்ளனர். யாருக்கும் கனவில் கூட வந்துவிடக்கூடாத ஒரு சூழல் நிமிஷா பிரியாவுக்கு வந்துவிட்டது.
ஏமன் நாட்டு கட்டுப்பாடுகள் அதிகம். அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது. எனவே நிமிஷா பிரியா தப்பிக்க வேண்டுமானால் மஹ்தி குடும்பத்தினர் சமரசம் அடைய வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இது ஒரு உயிரின் போராட்டம். ஆனால் முயற்சி பலன் அளிக்குமா?