போராட்டம் வெடித்தது
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் ஆகியோர் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் சந்திக்கும் போது, நான் எழுதிய கடிதங்கள், வாழ்த்து மடல்கள் கிடைத்ததா என கேட்பார்கள். இல்லை என்றால் சோகமாகி விடுவார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு இது வேடிக்கையாகத் தோன்றும். ‘ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் செஞ்சிருக்கலாமே?’ என சொல்வார்கள். அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள், உலகில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளன.
கணினி வந்த பிறகு எப்படி ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்ததோ, அதேபோல சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு மிக பெரிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் சமூக வலைத்தளங்களை அதிக எண்ணிக்கையிலான பயனர்களுடன் பயன்படுத்துகின்றன.
சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா போன்ற சில நாடுகள் அரசு தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பயன்பாட்டை மிகவும் கட்டுப்படுத்துகின்றன. உலக அளவில் 350 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் சுதந்திரமான களமாக இருப்பது தான். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை ஓர் உயிரியாகப் பாவிக்கிறார்கள். தங்கள் சுக, துக்கங்களை அதனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இவை ஒரு பக்கம். மற்றொரு பக்கம் இன்றைய சமூகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும் உண்டு.
இந்நிலையில் நேபாள நாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் பதிவு செய்ய காலக்கெடு விதித்தது அந்நாட்டு அரசு. அந்த கெடு முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி வரை பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது. நேபாள அரசின் சமூக வலைத்தள தடைக்கு பேச்சுரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கை இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் சமூக வலைத்தள நிறுவனங்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க தவறியதற்கு அரசின் கடுமையான நிபந்தனைகள் கூட காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டது நேபாள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதால் 14 பேர் உயிரிழந்தனர். 100 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் 2008ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது அங்கு நடக்கும் ஆட்சியை பார்த்து முன்பு இருந்த மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். காரணம் சமூக வலைத்தளம் என்பது பொதுமக்களுக்கு தவிர்க்க முடியாத காரணியாக மட்டுமல்ல, கருத்துரிமைக்கான களமாகவும் மாறி உள்ளது.