இந்தியா-பாக். மோதல் விளம்பர வீடியோவால் சர்ச்சை: சேவாக்கிற்கு கடும் எதிர்ப்பு
மும்பை: 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9ம் தேதி முதல் செப். 29 ம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை செப். 14ம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இந்தபோட்டியை மையப்படுத்தி ஒளிபரப்பு நிறுவனமான சோனி நெட் ஒர்க் விளம்பர வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த விளம்பர வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும், என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொடூரத் தாக்குதலின் சோகம் மறைவதற்குள், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை கொண்டாட்டமாக முன்னிறுத்துவதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டின் உணர்வுகளை மதிக்காமல், வர்த்தக நோக்கத்திற்காக இந்த போட்டி விளம்பரப்படுத்தப்படுவதாகக் கூறி, ஆசியக் கோப்பையை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவு கூடாது என்று ஆக்ரோஷமாக கருத்து தெரிவிக்கும் வீரேந்திர சேவாக், இந்த விளம்பர வீடியோவில் தோன்றியது இரட்டை நிலைப்பாடு என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தப் போட்டிக்கு அனுமதி அளித்த பிசிசிஐ-யும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆசிய கோப்பையை புறக்கணிக்கவும் என்ற ஹேஷ்டேக் பரவலாகி, ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.