சென்னை: லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சிலிண்டர் விநியோகம் சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வரும் 1ம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது. நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கலந்துரையாடலின் அடிப்படையில், அவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் முக்கிய எரிசக்தி கூட்டாளியான இந்தியன் ஆயில், நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் பரிவுடன் இடையில்லா சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.