போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர்களை அழைத்து பேச தயார்: பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதில்
சென்னை : பேரவையில் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை (கந்தர்வகோட்டை) பேசியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் 30 தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு உள்ளது. 2024, ஜூன் வரை அரசும் அவற்றை வழங்கியிருக்கிறது.
அதற்கு பிறகு, 17 மாதங்கள் அவை வழங்கப்படாமல் உள்ளன. அவை வழங்கப்படுமா?. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடைய நலனைப் பாதுகாத்திட தொழிலாளர்கள் தொடர்ந்து 59 நாட்களாக காத்திருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: ஓய்வு பெற்றவர்களுடைய பணப்பலன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து, கடந்த மாதம்தான் ரூ.1,300 கோடி வழங்கியிருக்கிறார். மீதமுள்ள தொகையும் விரைவில் வழங்கப்படும்.
நான் இதுகுறித்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்தரராசன், ஆறுமுக நயினார் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துப் பேசினேன். அவர்களிடத்திலும் உறுதியளித்தேன். ஆனாலும், அவர்கள் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன். தாங்கள் வந்தால், உங்களையும் வைத்துக்கொண்டு அவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன். அவர்கள் வைத்த கோரிக்கைகளில், ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருக்கிறோம்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுடைய மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும்கூட அதில் ஒரு கோரிக்கை இருக்கிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களில் 4 சதவிகிதம் பேர்தான் அதற்காக விண்ணப்பிக்கிறார்கள். மீதமிருப்பவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மீதி பேர் விண்ணப்பிக்காத நிலையில் 4 சதவிகிதம் பேருக்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனம் முன்வருவதற்கு தயங்குகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.