திருப்பத்தூர் மாவட்டத்தில் தொல்லை அதிகரிப்பு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சண்டையிடும் தெருநாய்கள்
*பொதுமக்களை கடித்து குதறுவதால் பீதி
*அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த பச்சிளம்குழந்தையை தெரு நாய்கள் தூக்கிச்சென்றது. இதேபோல் தெலங்கானாவில் 4 வயது குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிக்கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வைரலானது.
சென்னையில் 55 வயது பெண், தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நாய் விரட்டியதில் கீழேவிழுந்து இறந்தார். இதுதவிர நாய்கள் கடித்து ஏராளமானோர் காயமடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
நாட்டில் 1.5 கோடி தெரு நாய்கள் இருப்பதாக கால்நடைக் கணக்கெடுப்பு கடந்த 2019 புள்ளிவிவரப்படி தெரிவித்தது. நாய்க்கடி ரேபிஸ் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது.
திருப்பத்தூரை பொருத்தவரை கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ஹவுசிங் போர்டு, புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேரமும் தெருநாய்கள் சுற்றித்திரிவதோடு சாலைகளில் படுத்து போக்குவரத்து இடையூறாக உள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு அவ்வழியாக வரும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் அவ்வப்போது கடித்து குதறுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் தெருநாய்கள் அதிகரித்துள்ளது. இவை இரவில் மட்டுமின்றி பகலிலும் நடுரோட்டில் சண்டையிடுகிறது. சில நாய்களின் உடலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டும். என தெரிவித்தனர்.