தெரு நாய்கள் விவகாரம் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர விசாரணை
புதுடெல்லி: நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தெரு நாய் மற்றும் விலங்கின ஆதரவாள அமைப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விலங்கின ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில்,‘‘அனைத்து தெரு நாய்களையும் விதிவிலக்குகள் இல்லாமல் நாய் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தெரு நாய்களை விதிவிலக்குகள் இல்லாமல் காப்பகங்களுக்கு பிடித்து சென்று அடைக்க என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘இது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தெரு நாய் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து ஒரு முடிவை மேற்கொள்வதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர்.கவாய் அமைத்துள்ளார்.அதில், ‘‘நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமர்வு, தெரு நாய்கள் தொடர்பாக வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.
* வழக்கறிஞர்கள் மீது விலங்கு ஆர்வலர்கள் தாக்குதல்
உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தெரு நாய்கள் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞரை, நாய்கள் நல ஆர்வலர்கள் திடீரென சூழ்ந்து கொண்டு கடுமையான வார்த்தைகளால் நேற்று திட்டி பேசினர். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், வழக்கறிஞரை விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கினர். போலீசார் உடனடியாக சண்டை நடந்த இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.