நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்
இந்தநிலையில் சமீப காலமாக நாகர்கோவில் மாநகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருக்கிறது. தெருக்கள் மட்டுமின்றி தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இவ்வாறு வரும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவதுடன் சிறுவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து சென்றால் அவர்கள் மீதும் பாய்ந்து பதம் பார்க்கும் நிலை உள்ளது. நாய்களை கண்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தெருக்களில் பகல் வேளையில் நடந்து செல்பவர்களையும் விடாமல் நாய்கள் பதம் பார்த்து வருகின்றன. நாகர்கோவில் மாநகரை பொறுத்தவரை வடசேரி, கிருஷ்ணன் கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம், ஆசாரி பள்ளம், ராமன்புதூர் கார்மல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை வேளையில் நடைபயிற்சி செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களையும் நாய்கள் விடாமல் துரத்தும் நிலை உள்ளது. நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்திற்குள் நடைபயிற்சிக்கு வருபவர்களையும் நாய்கள் தொந்தரவு செய்து வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே நாய்களை உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிடித்து கருத்தடை செய்ய கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் சில போலி அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களைப் பிடிக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் .மேலும் வன விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் பல போலி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மிரட்டி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.