தெரு நாய் விவகாரத்தில் மாநில தலைமை செயலாளர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
புதுடெல்லி: நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் சமீபத்தில் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
இதனை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தெரு நாய் மற்றும் விலங்கின ஆதரவாள அமைப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,
‘‘இந்த விவகாரத்தில் டெல்லி உட்பட பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அனைவரும் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், ‘‘தெரு நாய் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்து, அவர்கள் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான நபர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதி விகரம்நாத்,‘‘உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவை மாநில அரசின் செயலாளர்கள் மதிக்கவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. தலைமை செயலாளர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராக தான் வேண்டும். இதில் அதிகப்படியான நபர்கள் ஆஜராகிறார்கள் என்றால், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு அரங்கில் வேண்டுமானால் விசாரணையை நடத்தலாம். அதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.