வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்சினைகள் அல்ல: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி கருத்து
டெல்லி: பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் ஒன்றிணைந்து கைகோர்த்துச் செல்வதை நாம் உறுதி செய்ய முடியும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கூடிய விரைவில் டெல்லி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த நாய்களை நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு சுமார் 5 ஆயிரம் தெருநாய்களை அடைக்கும் அளவுக்கு காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், நோய்த்தடுப்பு மருந்துகளை அளிக்கவும் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது;
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான - அறிவியல்பூர்வ அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கையில் இருந்து ஒருபடி பின்நோக்கிச் செல்வதாகும்.
இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்சினைகள் அல்ல.
தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகள் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் - கொடுமை இல்லாமல்.
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது. மேலும் இது இரக்கமற்றது.
பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் ஒன்றிணைந்து கைகோர்த்துச் செல்வதை நாம் உறுதி செய்ய முடியும் என ராகுல் தெரிவித்துள்ளார்.