தெருநாய் வழக்கால் நான் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவை பேச்சு!
திருவனந்தபுரம்: தெருநாய்கள் தொடர்பான வழக்கு தான் உலக அளவில் எங்களை பிரபலமாக்கிவிட்டது என உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து நீதிபதி விக்ரம் நாத் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நீதிபதி விக்ரம் நாத் வெளியிட்ட தீர்ப்பில், டெல்லி - என்.சி.ஆர் பகுதிகளில் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு பிடித்த இடங்களிலேயே விட வேண்டும். தெருநாய்களுக்கு பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக உணவளிக்க கூடாது. தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு ‘நாய்களுக்கு உணவளிக்கும் இடம்’ என்ற அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது; நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தெருநாய்கள் குறித்த வழக்கு, தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டது. இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு நன்றி செலுத்துகிறேன். இவ்வழக்கில் நாய் பிரியர்களை கடந்து நாய்களும் எனக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி இருக்கிறது என கருதுகிறேன் என்றார்.
2027ம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத்தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11ம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.