திருச்சி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா
திருச்சி: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டியில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் விஜய தசமி தினத்தன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெறும். அதன்படி விஜயதசமியான நேற்று பேய் விரட்டும் திருவிழா நடந்தது. முன்னதாக அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், வெடிகார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் வாண வேடிக்கையுடன் அருகில் உள்ள காட்டு கோயிலுக்கு சுமந்து சென்றனர். அப்போது கோயிலை சேர்ந்த சேர்வைக்காரர்கள் மற்றும் பூசாரிகள் பாரம்பரிய உடை அணிந்து தப்படித்து நடனம் ஆடினர்.
தொடர்ந்து காட்டு கோயில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து விட்டு கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோயில் பூசாரி, பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் கோயிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்து, விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர்.
இந்த அச்சப்பன் கோயிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் பில்லி, சூனியம், பேய் பிடித்தல் ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பது ஐதீகமாகும். இதில் திருச்சி மட்டுமின்றி சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.