மலாகா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையை கடந்தது!
இந்தோனேசியா: மலாகா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்யார் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு திசை நோக்கி நகர்ந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று காலை மேலும் மேற்கு வட மேற்கு நோக்கி நகரும் என்றும், முற்பகலில் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் மலாக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் அருகே இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்யார் புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைந்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் சென்யார் புயல் மேற்குத் திசை நோக்கி நகர்ந்து காலை 8:30 மணியளவில் இந்தோனேசியாவில் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்யார் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
மேலும் மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு திசை நோக்கி திரும்பக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல், வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது கணிக்கப்பட்டுள்ளது.