புயல் எச்சரிக்கை, கந்த சஷ்டி விரதம் எதிரொலி சென்னை காசிமேட்டில் மீன் விற்பனை குறைந்தது: வரத்து குறைவால் மீன் விலை அதிகம்
சென்னை: புயல் எச்சரிக்கை, கந்த சஷ்டி விரதத்தால் சென்னை காசிமேட்டில் நேற்று மீன்வாங்க குறைந்த அளவில் கூட்டம் காணப்பட்டது. அதே நேரத்தில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்து காணப்பட்டது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கிய புரட்டாசி மாதம் கடந்த 16ம் தேதி(வியாழக்கிழமை)முடிந்தது.
17ம் தேதி(வெள்ளிக்கிழமை) ஐப்பசி மாதம் பிறந்தது. தொடர்ந்து கடந்த வாரம் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. நேற்று புரட்டாசி முடிந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனால், மீன்வாங்க கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து அது புயலாக மாறியுள்ளது. இதனால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதனால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். இதனால் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான நேற்று மீன்களின் வரத்து என்பது குறைவாகவே இருந்தது.
மேலும், கந்தசஷ்டி விரதத்தின் 5வது நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இருந்த போதிலும் மீன் வரத்து குறைவால், மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1300க்கு விற்கப்பட்டது.
இதே போல கொடுவா ரூ.700, சீலா ரூ.400, பால் சுறா ரூ.600, சங்கரா ரூ.300, பாறை ரூ.650, இறால் ரூ.700, நண்டு ரூ.400, கானாங்கத்தை ரூ.250, கடுமா ரூ.450, நெத்திலி ரூ.200 என விற்கப்பட்டது. மீன் விலை அதிகமாக இருந்ததால் மீன் வாங்க வந்தவர்கள் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர்.