சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை தரையிறங்க முடியாமல் வானில் 10 விமானங்கள் வட்டமடித்தன: சென்னையில் 25 விமான சேவை பாதிப்பு
சென்னை: சூறைக்காற்று, இடி மின்னலுடன் ஒருமணி நேரம் கனமழை பெய்ததால் 10 விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் 25 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னையில் தரையிறங்க வந்த கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி, மதுரை, விஜயவாடா, திருச்சி, டெல்லி, சீரடி, பெங்களுரு உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, மழை சற்று ஓய்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குவைத், துபாய், டெல்லி, கொச்சி, கோவா, மங்களூரூ உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.