புயல் எச்சரிக்கை உள்ளதால் வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவம் வாங்கும் பணியை பூத் அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும்
*ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அறிவுறுத்தல்
வந்தவாசி : வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகம் செய்தல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாங்குதல், வாங்கிய படிவங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது.
தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் திருத்த அலுவலர் செல்வம், தாசில்தார்கள் சம்பத்குமார், உதயகுமார் முரளி, முகமது கனி, நகராட்சி ஆணையாளர் சோனியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.கிஷோர் குமார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்ஐஆர் சிறப்பு திருத்தம் பணி இன்னும் சில நாட்களே உள்ளன. அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்து 100 சதவிகிதம் இப்பணியை முடிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வருகின்ற 4ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் முழு பணியை முடிக்க முடியும் என்றார்.
இதை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மகளிர்க்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைகள் மகளிர் குழுவினர் கோலம் மூலமாக வெளிப்படுத்தியதை மகளிர் கொடுமைக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் ஆண் பெண் இருவரும் சமம் பெண்களை மதிப்போம் சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உள்ளதை பத்திரப்பதிவு செய்வதன் மூலமாக நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை வாசித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் பெரிய மசூதி அருகில் உள்ள மையத்தை பார்வையிட்டு அங்கு எஸ்ஐஆர் திருத்தம் பணி மேற்கண்ட வாக்குச்சாவடி அலுவலரிடம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வானிலை ஆய்வு மையம் புயல் மழை எச்சரிக்கை செய்துள்ளது எனவே பொதுமக்கள் மழைக்காலத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பார்கள்.
எனவே படிவம் கொடுக்கப்பட்டவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்டு வாங்கும் பணியை பூத் அலுவலர் முனைப்பு காட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். முன்னதாக பதிவேற்றம் பணியை 100% சிறப்பாக செய்த அலுவலர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆன்லைன் செயலியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் அகத்தீஸ்வரனிடம், வாக்காளர் விவரங்களை தவறில்லாமல் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 100 சதவீதம் தரவுகளை செயலியில் பதிவேற்றிய கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார். அப்போது தேர்தல் பிரிவு சப் கலெக்டர் சதீஷ்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் கோமதி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆரணி: ஆரணி நகராட்சியில் உள்ள விகே நகர் பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் படிவங்களை வீடுகளில் வழங்கும் பணியினை கலெக்டர் க.தர்ப்பகராஜ் நேற்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் என்.டி.வேலவன், தாசில்தார் செந்தில்குமார் உடனிருந்தனர்.