கடைக்கோடிக்கும் சேவை
விடியல் பயணம் திட்டம் மூலம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு அகல் விளக்கு திட்டம், கல்லூரி படிப்பையும் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நீரிழிவு நோய், இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட முதியோர்கள் மற்றும் பெண்கள் வசிக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இன்னுயிர் காப்போம் திட்டம், முதல்வர் படைப்பகம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என மக்களுக்கு பயனுள்ள எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் முக்கியமான திட்டமாக ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் துவக்கி வைக்கிறார். இதன் மூலம் அரசு திட்டங்கள் கிடைக்காத மக்கள் பயனடைய பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் விவசாயிகளுக்கு பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இத்திட்டத்தின் மூலம் சரிசெய்யப்படுகிறது.
‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. ‘‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஜூலை 15 தொடங்க உள்ள நிலையில், 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், தகவல் கையேடுகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 43 திட்டங்களுக்கான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் நோக்கமாகும். நகர பகுதிகளில் நடைபெற உள்ள 3,768 முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஊரகப்பகுதிகளில் நடைபெற உள்ள 6,232 முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் வரை முகாம்கள் நடத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முகாம்களுக்கு வரும் மக்களுக்காக மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. அரசு திட்டங்களை பெறவும், தங்களின் குறைகளை தெரிவிக்கவும் பெண்கள், முதியோர்கள் நடையாய் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களின் கதவுகளை தட்டும் காலங்கள் மறைந்து வீடு வீடாக சென்று குறைகளை மனுக்களாக பெற்று தீர்க்கும் காலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
