பீகார் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் கார் மீது கல்வீச்சு: போதை ஆசாமியின் ரகளையால் பரபரப்பு
ஆரா: பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளரின் கார் மீது குடிகாரர் ஒருவர் கல்வீசித் தாக்கிய சம்பவம், அங்குள்ள மதுவிலக்கு சட்டத்தின் நிலைகுறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஜன சுராஜ் கட்சி வேட்பாளர் டாக்டர் விஜய் குப்தா, போஜ்பூர் மாவட்டம் ஆராவில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது வாகனம் கிராமத்திற்குள் நுழைந்தபோது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், திடீரென பிரசார வாகனம் மீது செங்கற்களையும் கற்களையும் சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினார். இதில், அந்த வாகனத்தின் முகப்புக் கண்ணாடி நொறுங்கி, கார் பலத்த சேதமடைந்தது.
தாக்குதலின்போது, வேட்பாளர் விஜய் குப்தா மற்றொரு வாகனத்தில் இருந்ததால் காயமின்றி தப்பினார். தாக்குதலில் ஈடுபட்ட நபர், காரின் மீது ஏறி நின்று, மற்றொரு அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாகப் பேசியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்களும், கட்சித் தொண்டர்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து டாக்டர் விஜய் குப்தா கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த அந்த நபர், எங்கள் வாகனத்தைக் குறிவைத்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது’ என்றார்.