3000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமனிதன் கற்திட்டைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள எதிரொலி பாறை அருகே அமைந்துள்ள தொல்லியல் துறை கட்டுபாட்டில் அமைந்துள்ள சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20 கும் மேற்பட்ட கற்திட்டைகள் அமைந்துள்ளது.
மேலும் இந்த கற்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு வந்து இங்குள்ள கற்திட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முதற்கட்டமாக இங்கு புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், சிதிலமடைந்துள்ள கற்களை தற்காலிகளாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து பேசிய இந்திய தொல்லியல் துறையில் திருச்சி தொல்லியல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார், திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரையில் 162 நினைவு சின்னங்கள் உள்ளது என்றும் இதில் திண்டுக்கல் மலைக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருப்பதாகவும் இதில் பாதுகாக்கப்பட கூடிய நினைவு சின்னங்களாக உள்ளதில் இந்த கொடைக்கானல் மலை பகுதியில் 5 இடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உலக பாரம்பரிய வார விழாவில் இந்த பழமையான சின்னங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு வந்ததாக அவர் கூறினார். இதனையடுத்து அடுத்த கட்டமாக இவற்றை பாதுகாக்கும் பணியில் தீவிரப்படுத்தி சுற்றுலா இடமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார்.
மேலும் இங்குள்ள கற்திட்டைகள் சுமார் 3000ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், இது தஞ்சை பெரிய கோவிலை விட 1000ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கட்டிட கலை குறித்து முன் உதாரணமாக அந்த காலத்திலேயே இங்குள்ள கற்திட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது,என்றும் இங்கிருந்து தான் கட்டிட கலை தொடங்கப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
மேலும் கீழடியை விட மிகவும் பழமையான ஒரு நினைவு சின்னம் இது என்றும், இது போல கட்டிட கலையை அப்போதே கொண்டுவரப்பட்டுள்ளது இது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.