களங்கம்
ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள், சுகாதார திட்டங்கள், குழந்தைகள் நல்வாழ்வு திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை கொண்டுள்ள எல்ஐசியானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இன்றளவில் முதலீடு செய்திட நல்லதொரு நிறுவனமாக எல்ஐசி காணப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்காலம் தொடங்கிய நாளில் இருந்தே, பொதுத்துறை நிறுவனங்களுக்கு கெட்டகாலம் தொடங்கி விட்டது.
நல்ல லாபத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி, அவற்றின் மீதான மக்கள் நம்பிக்கையை மோடி சீர்குலைத்தார். ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இன்று சீரழிவை நோக்கி செல்ல கடந்த 10 ஆண்டுகளில் பாஜ மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் எனலாம். அதற்கு அடுத்தபடியாக எல்ஐசி என்கிற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தையும் பாழாக்கும் முயற்சியில் பாஜ அரசு இப்போது களம் இறங்கியுள்ளது.
தனது கார்ப்பரேட் நண்பர்களை கை தூக்கிவிட, நேற்றும், இன்றும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இப்போது எல்ஐசி நிறுவனத்தை அதில் பணய கைதியாக்கியுள்ளார். இந்தியாவில் அதானி குழுமத்திற்கு அடி விழும்போதெல்லாம் ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக இன்று வரை பிரதமர் மோடி திகழ்கிறார். குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் 2023ல் வெளியிட்ட புள்ளிவிவரங்களால் அப்போது அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவுக்கு உள்ளாகின.
தோழமைக்கு ஒரு துன்பம் என்றால் சும்மா இருப்பாரா மோடி?. உடனடியாக எஸ்பிஐ மற்றும் எல்ஐசி நிறுவனங்களின் ரூ.525 கோடியை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்து, அதானி குழுமத்தை கைத்தூக்கி விட்டார். பிரதமரின் பேச்சை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளையான இந்திய பங்குகள் பரிவர்த்தனைகள் வாரியமும், இந்திய பங்குசந்தையில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என மக்கள் மத்தியில் ஓர் அறிக்கையை ஒப்புவித்தது.
இந்நிலையில் இப்போதும் அமெரிக்க பத்திரிக்கையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தி ஒன்றில், அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் ரூ,.33 ஆயிரம் கோடியை முதலீடு செய்திருப்பதாக’ தெரிவிக்கிறது. வழக்கம்போல் எல்ஐசி நிறுவனம் அமெரிக்க பத்திரிக்கையின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எல்ஐசியின் முதலீடுகள் வெளிப்படையாகவும், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு என்பது இப்போது இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பை கையில் வைத்துக் கொண்டு, எல்ஐசி இத்தகைய விஷ பரிட்சைகளில் இறங்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதானி குழுமத்தில் முதலீடு செய்ய ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளே மறைமுக திட்டங்கள் வகுத்து கொடுத்துள்ளதால், அவர்களும், ஒன்றிய அரசும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளனர். சிறுக, சிறுக பொதுமக்கள் சேமிக்கும் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் அள்ளிக்கொடுப்பது, காப்பீட்டு துறைக்கே களங்கம் விளைவிப்பதாகும். நண்பனை விட நாட்டு மக்கள் முக்கியம் என்பதை மோடி உணர்ந்தால் சரி.