ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் அமைக்க நடவடிக்கை
*குறைதீர்வு கூட்டத்தில் மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். டிஆர்ஓ தனலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் கீதாலட்சுமி, கலால் உதவி ஆணையர் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் 9 இடங்களில் அரசு மணல் குவாரிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதனை வரவேற்கிறோம். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக மணல் இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் லாரி ஓனர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் இதனை நம்பியே வாழ்கின்றனர்.
கடந்த 20 மாதங்களாக மணல் குவாரிகள் இல்லாததால் இவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி நேரடியாக வாழும் 25 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைமுகமாக 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு அரசானது மணல் குவாரிகளை இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நாதக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மான் அளித்த மனுவில், `அனந்தலை மலையில் இயங்கி வரும் கல்குவாரிகளால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர்.
மேலும், அதிக அளவிலான வெடி மருந்துகளை பயன்படுத்தி, அனுமதிக்கப்பட்ட நேரங்களில் வெடிப்பதற்கு மாறாக இரவு நேரங்களிலும் விடியற்காலை நேரங்களிலும் அதிகப்படியான சத்தத்துடன் வெடியை வெடித்து மக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்கள். அதிகமாக கற்களை வெட்டி எடுத்து கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருகிறார்கள். அதை தட்டிக் கேட்கும் பொதுமக்களை மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
சோளிங்கர் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் அளித்த மனுவில், `எனது மகள் சந்திரா கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி துணி துவைக்கும் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். எனது இரண்டாவது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். இதுவரை நாங்கள் ஜாதி சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று வாங்கவில்லை. அரசாங்கம் மூலம் வழங்கும் உதவித்தொகையை வழங்க வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எனக்கு வழங்கவில்லை.
எனவே உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த மனுவில், `சிறுகரும்பூர் எல்லைக்கு உட்பட்ட ஏரி கால்வாய் சுமார் 30 அடி அகலம் கொண்டதாகும். அந்த ஏரி கால்வாய் முழுவதும் தனிநபர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை காக்க கால்வாய் அளவீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என கூறியிருந்தார்.
பாணாவரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரண்யா அளித்த மனுவில், `பாணாவரம் ஊராட்சியில் சோளிங்கர் ரயில் நிலையம் உள்ளது. ரயில், பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதி கொண்ட பாணாவரம் சுமார் 710 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் சிறுவர் பூங்கா மற்றும் வனஉயிரியல் பூங்கா ஏற்படுத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 448 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.96 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலி கருவி உட்பட அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.