திருடியதாக கூறி கொடூர தாக்குதல் பெண்ணின் தலைமுடியை அறுத்து அரை நிர்வாண ஊர்வலம்: ஜார்கண்டில் காட்டுமிராண்டித்தனம்
கிரிதிக்: ஜார்கண்டில் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு செருப்பு மாலை அணிவித்து கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், பெண் ஒருவரை கிராம மக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அந்தப் பெண்ணைப் பிடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவரது தலைமுடியை வெட்டி, அரை நிர்வாண நிலையில் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். சுற்றிலும் நின்றவர்கள் இந்த மனிதநேயமற்ற செயலை காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, பெண்கள் குழு ஒன்று அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு, அவர்களில் ஒரு பெண் மரக்கம்பால் அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் பார்ப்போரை பதறவைக்கிறது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் உள்ள மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.