அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்: ஏஐடியூசி வலியுறுத்தல்
சென்னை: ஏஐடியூசி பொதுச்செயலாலர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர், நடத்துனர் பாதுகாவலர்கள், உணவகத்தில் பணிபுரிவோர், பஸ் பாடி கிளீனர், சுகாதார பணியாளர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பணிபுரிந்து வரும் டிக்கெட் கன்வாசர் என 30 தினங்களுக்கு மேல் 2024-25ம் நிதியாண்டில் பணிபுரிந்துள்ளனர். போனஸ் சட்டப்படி இந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். ஆனால் இந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே அரசின் சமூக நல நோக்கங்களை நிறைவேற்றி வரும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு லாப நட்ட கணக்கு பார்க்காமல் தற்போதுள்ள விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டு 25% போனஸ் குறைந்தபட்ச ஊதியத்தின்படி கணக்கிட்டு வழங்க வேண்டுமென ஏ.ஐ.டி.யு.சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.