பாஜ ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு: சண்முகம் தாக்கு
கோவில்பட்டி: பாஜ ஆளாத மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நிரந்தரப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்வது என்ற தமிழ்நாடு அரசின் ஊழியர் விரோதக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, அந்தந்த துறைகள் மூலமாகவோ, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ தேர்வு நடத்தப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டுவதாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான நிதி தராததாலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
பாஜ. ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில், ஒன்றிய பாஜ., அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழகத்தை போலவே கேரள மாநிலமும் ஒன்றிய அரசின் இத்தகைய செயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் என்ற திட்டம் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார். பிரசாரத்திற்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு வெற்றிகரமான நடிகரை பார்க்க கூட்டம் கூடும் என்பது இயல்பான ஒன்று. விஜயகாந்த், கமலஹாசன் போன்றோர் கட்சி ஆரம்பித்தபோதும் அதிகமான கூட்டம் கூடியது.
ஆனால் காலப்போக்கில் அந்த கூட்டம் எங்கே போனது என்பதே தெரியாமல் போய்விட்டது. ஆகவே, 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு தான் விஜய்க்கு என்ன பலம் இருக்கிறது என்பது தெரியும். கோவில்பட்டியில் இன்று (செப்.20) நடக்கும் தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா என்பது அதிமுக., மற்றும் பாஜ., கட்சிகள் சார்பில் நடத்தப்படும் விழா. சிறுகுறு தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் அதில் கலந்து கொள்ளப்போவதில்லை. தீப்பெட்டித்தொழில் அழிந்ததற்கு காரணமே ஒன்றிய பாஜ அரசின் ஜி.எஸ்.டி. வரிதான். தீப்பெட்டிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி., வரியை அறிவித்து தீப்பெட்டித்தொழிலை அழித்துவிட்டனர். லைட்டர் பயன்பாட்டால் தீப்பெட்டித் தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.