மாநிலங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரி இழப்பு அபாயம்
புதுடெல்லி: ஜிஎஸ்டி முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களும், புதிய ஜிஎஸ்டி சீரமைப்பால் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு வரி இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தது. தற்போது 8 வருட தாமதத்திற்குப் பிறகு மோடி அரசு விழித்தெழுந்து, வரி விகித பகுத்தறிவு பற்றிப் பேசியது ஒரு நல்ல விஷயம். ஆனாலும் இதில், 2024-25 ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் வரி விகிதங்களைக் குறைப்பது மாநிலங்களின் வருவாயில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.ஜிஎஸ்டியின் சிக்கலான இணக்கங்களும் நீக்கப்பட வேண்டும், அப்போதுதான் எம்எஸ்எம்இக்கள் மற்றும் சிறு தொழில்கள் உண்மையிலேயே பயனடையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘கூட்டுறவு கூட்டாட்சியின் உண்மையான உணர்வில் மாநிலங்கள் முன்வைத்த ஒரு முக்கிய கோரிக்கை இது. அவர்களின் வருவாயை முழுமையாகப் பாதுகாக்க இழப்பீட்டை இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், இது கவனிக்கப்படாமல் உள்ளது’’ என்றார்.
வளர்ச்சி, ஆதரவுக்கான இரட்டை மருந்து ஜிஎஸ்டி
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் நேற்று உரையாடிய பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஜிஎஸ்டி இன்னும் எளிமையாகிவிட்டது. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற புதிய விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளிலிருந்து அமலுக்கு வரும். ஜிஎஸ்டி 2.0 என்பது தேசத்தின் ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து. 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்தில் ஐந்து புதிய ரத்தினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியின் போது தினசரி வீட்டு உபயோக பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. பாஜ அரசு சாமானிய மக்களின் வசதிக்காக அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்தது’’ என்றார்.