மாநிலக் கல்விக் கொள்கை மீதான கருத்துகளுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
சென்னை: தமிழக மாநில கல்விக் கொள்கை, அணுக்கமாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும், தமிழ்நாட்டின் சூழலில் வேரூன்றப்பட்டதாகவும் உள்ளது. மேலும் இதனை நடைமுறைப் படுத்துவதற்கான செயல்திட்டத்தில் இதன் உட்கூறுகளை அளந்தளித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாநிலக் கல்விக் கொள்கை மீது எழுந்துள்ள கருத்துகளுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக மாநில கல்விக் கொள்கை குறித்து பேராசிரியர் ஜவகர்நேசன் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1. கொள்கை வடிவமைப்பின் அடிப்படை நோக்குகளை மீறல்
விளக்கம்: மாநிலக் கல்விக் கொள்கையில், ‘‘இந்தக் கொள்கை மாற்றங்களுக்கேற்ப திருத்தக்கூடிய வகையில் உயிர்ப்புடன் இருக்கும் ஆவணம் ஆகும். பொதுக் கருத்துகள் அனைத்து தரப்பிலும் இடையறாத முறையில் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கொள்கையாக இல்லை
விளக்கம்: மாநிலக் கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. மூன்றுமொழிக் கொள்கையை நிராகரிக்கிறது. சமூகநீதி வரலாற்றை ஆழமாக வலியுறுத்துகிறது. கல்வி என்பது தமிழ் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதே நேரத்தில் உலகளாவிய ஈடுபாட்டிற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
3. தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மறுகட்டமைத்தல் மற்றும் திட்டங்களை பரிந்துரைகளாக மாற்றியதாக உள்ளது.
விளக்கம்: சிறப்பான நலத்திட்டங்கள், கற்றல் திட்டங்களில் சமவாய்ப்பளித்தல் மற்றும்அணுக்கத்தினை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழிமுறையாகும். இது வெற்று மறு கட்டமைக்கப்பட்ட ஆவணம் இல்லை. எண்ணும் எழுத்தும் இயக்கத்தினை ஒன்றாம் வகுப்பிற்கான ஆயத்த நிலைக்கு நீட்டித்தல், செறிவூட்டப்பட்ட தொழிற்கல்வி கலைத்திட்டம், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை உள்ளகப் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
4. தனித்துவமான முதன்மை தொலைநோக்கினை வளர்ப்பதில் தோல்வியடைந்துள்ளது
விளக்கம்: ஒவ்வொரு குழந்தையின் திறமைகளை வளர்த்து, மாணவர்களை 21ம் நூற்றாண்டிற்கு திறன் மிக்கமானவர்களாக்கி வளர்ந்து வரும் உலகில் பரிவுள்ள, நம்பிக்கையுள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்தல். கூர் சிந்தனை, படைப்பாற்றல், பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருதல் ஆகிய திறன்களை வளர்க்கும் முதன்மையான முன்னெடுப்புகள் உள்ளன.
5. செயலிகள் தளங்கள் வாயிலாக அதீத மையப்படுத்துதல் உள்ளது.
விளக்கம்: கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS), TN-SPARK, ஆகிய எண்ணியத் தளங்கள் தரவுகள் மேலாண்மை மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட கருவிகளாகும். ஆனால் இவை ஆசிரியர் வகுப்பறை சுதந்திரத்திற்கு மாற்று அல்ல. வேறுபட்ட கற்போர் தேவைகளுக்கேற்ற வகுப்பறை செயல்பாடுகள், ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு மூலம் ஆசிரியர்கள் திறன் மிக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
6. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ பிரதிபலித்தல்
விளக்கம்: தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை 2025 வெளிப்படையாக மறுக்கிறது. 10 2 அமைப்பினையும், மாநில கலைத்திட்ட கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
7. சமவாய்ப்பளித்தல், பன்முகத்தன்மை, சமூக நீதி ஆகியன பாதிப்பிற்குள்ளாகி உள்ளது
விளக்கம்: சாதகமான மாணவர்-ஆசிரியர் விகிதத்தினை அடைய ஆசிரியர் நியமனத்தை இக்கொள்கை வலுப்படுத்துகிறது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் அதிகமாக உள்ள மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பினை முதன்மைப்படுத்தி, உள்ளடங்கிய வகுப்பறை வளங்களை மேம்படுத்துகிறது. குறைவான மொத்த சேர்க்கை வீதம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, விளிம்பு நிலைப் பிரிவினர்களிடையே சேர்க்கை இடைவெளிகள் குறைக்கப்படுவதை வலியுறுத்துகிறது. இதுபோல் தனியார் மயமாதலை ஊக்கு விக்கிறது, சாதிய சமநிலை இன்மையை புறக்கணிக்கிறது, சிறுபான்மையோர் கல்வி உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை போன்ற விமர்சனங்களுக்கும் தகுந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
இறுதியாக, இக்கொள்கையை திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கருத்துக்கு, ‘‘மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயார் செய்கிறது. இது சிறந்த உலக நடைமுறைகளின் வழியில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட, அளவிடப்படும் செயல் திட்டங்களினால் வளர்க்கப்பட்ட வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜவஹர் நேசன் குறைபாடுகள் என்று குறிப்பிட்டுள்ளவை, விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்ட தெரிவுகள் ஆகும். மாறாக இக்கொள்கை, அணுக்கமாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும், தமிழ்நாட்டின் சூழலில் வேரூன்றப்பட்டதாகவும் உள்ளது. மேலும் இதனை நடைமுறைப் படுத்துவதற்கான செயல்திட்டத்தில் இதன் உட்கூறுகளை அளந்தளித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனபள்ளிக்கல்வித்துறை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.