கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் தொடக்கம்: கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து, கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத்துறையின் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்தப் புதிய கலைஞர் நூற்றாண்டு கட்டடம், 5546.50 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல ஆறுவழிச்சாலைகள் - அதிவேக விரைவுச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் சாலைப் பணிகளை செயல்படுத்தவும், தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குடனும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் எனும் புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய ஆணையம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உயர்தரக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட காலம் மற்றும் மதிப்பீட்டில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன்மூலம் சாலை பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுடன், பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை மேம்பாடும் ஏற்படும்.
அத்துடன் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலை வலையமைப்புடன் இணைக்கப்படுவதோடு, பொதுமக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் இடங்களை அடைய உதவுவதுடன், சாலை அணுகல் வசதியையும் பெருக்கி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த புதிய நெடுஞ்சாலை ஆணையம் கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தில் செயல்படும். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,
சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.