தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து நெல்லையில் செப்.7ல் மாநில மாநாடு: செல்வபெருந்தகை அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுப் போயிருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து நாள்தோறும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதற்கு பா.ஜ.க. இசைவு தெரிவிக்கவில்லை. எதிர்கட்சிகள் கேள்வி நேரத்தின் போது கேட்கிற கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் அந்த கடமையை நிறைவேற்றாமல் பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது. அதைத் தொடர்ந்து வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நெல்லையில் எனது தலைமையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.