விவசாயிகளுக்கு நிதியை கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம்; குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் முன்னேற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
சென்னை: வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில்,
சுயஉதவிக் குழுக்களில் 55 லட்சம் பேர் உறுப்பினர்: முதல்வர்
நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. 55.12 லட்சம் பேர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன: முதல்வர்
தமிழ்நாட்டில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. முதியோர், பழங்குடிகள் இடம்பெற்று சுயஉதவிக்குழுக்கள் மூலம் 1.57 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கும் அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
ரூ.13,000 கோடி கடன் தரப்பட்டுள்ளது: முதல்வர்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இதுவரை ரூ.13,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 17500 சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன; ரூ.25.81 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
"எம்.பி.க்கள் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்துக": முதல்வர்
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக ஒன்றிய அரசு உயர்த்த முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.3 கோடி வீதம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.702 கோடி வழங்குகிறது.
ஒன்றிய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய அரசு தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என அரசு செயல்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு காலதாமதமின்றி மாநில அரசின் பங்கை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு நிதியை கொண்டு சேர்ப்பதில் முதலிடம்
விவசாயிகளுக்கு நிதியுதவிகளை கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக தாய்-சேய் நலத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 54,449 குழந்தைகள் மையங்களில் 22 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என முதல்வர் கூறினார்.
குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் முன்னேற்றம்
தமிழ்நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 14.6%ஆக இருந்த குழந்தையின் மெலிந்த தன்மை 3.6%ஆக குறைந்துள்ளது. 25% ஆக இருந்த குழந்தைகளின் உயர குறைபாடு 11.8%ஆக குறைந்துள்ளது. 22% ஆக இருந்த குழந்தைகளின் எடை குறைபாடு 5.7% ஆக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள 1,76,000 குழந்தைகளில் 77.3% பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதன் மூலம் 80.6% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.