மாநில நல்லாசிரியர் விருதுக்கு 386 பேர் தேர்வு
சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்தது.
இதையடுத்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான ஆசிரியர்களை மாநிலக் குழுவுக்கு, மாவட்ட குழுக்கள் பரிந்துரை செய்தன. அந்தப்பட்டியலில் இருந்து விருதுக்கு 386 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் செப்.5ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளார். அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தலில் புதுமை, பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு போன்றவற்றை வழங்கிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.