மாநில எல்லையில் உள்ள செக்போஸ்டுகளில் பாடி ஆன் கேமரா திட்டம் அறிமுகம்
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடலூர் வழியாக சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகின்றனர்.
ஏராளமான சரக்கு லாரிகளும் இந்த வழியாக வருகின்றன. பல்வேறு தேவைகளுக்காக சுற்றுலா பயணிகள் அல்லாத பலரும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வாகனங்களில் வருபவர்கள் வாகன சோதனையின் போது போலீசாருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் தவறான வார்த்தைகளும் பரிமாறப்படுகின்றன.
இதனை வாகனங்களில் வருவோர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாலும், அதில் காவல்துறைக்கு எதிரான செய்திகள் வெளி வருவதாலும் காவல்துறைக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
இவ்வாறு சம்பவங்கள் நடைபெறும் போது இரு தரப்பினரின் பேச்சின் உண்மை தன்மையை கண்டறியும் வகையில் தற்போது காவலர்களுக்கு வாகன சோதனையின் போது மார்பில் கேமராவை பொருத்தி வாகன சோதனை செய்யும் பணிகள் மாவட்டத்தின் தமிழக எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்ட வயல் மற்றும் கக்கனல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் பரீட்சார்த்தமாக துவக்கப்பட்டுள்ளது.
இந்த பாடி ஆன் கேமரா முறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது நடைபெறும் பேச்சு வார்த்தைகள் கேமராவில் பதிவாகிவிடும். பிரச்னைக்குரிய சம்பவங்களில் கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்யும் போது உண்மையான காரணத்தை கண்டறிய முடியும். மேலும், இவ்வாறு கேமராக்களை பொருத்தி போலீசார் சோதனையிடும் போது போலீசார் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதும் வெகுவாக குறைந்து விடும்.
வாகன ஓட்டிகளும் தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்து கண்ணியமாக பேசும் நிலை ஏற்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் இடையே சுமுகமான ஒரு சூழலும் ஏற்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.