வரும் 2ம் தேதி முதல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பின்னர் அவர் அளித்த பேட்டி:
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ வரும் 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. மக்களை தேடி முழு உடல் பரிசோதனை என்கிற வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15,000 வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000 வரை செலவாகும். ஆனால் இத்திட்டத்தில் எவ்வித கட்டணமும் இன்றி முழு உடற் பரிசோதனை செய்துகொள்ளலாம். சென்னையில் 15 முகாம்கள், பத்து லட்சத்துக்கு குறைவான மக்கள்தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் 4 முகாம்கள், வட்டார அளவில் தலா 3 முகாம்கள் என மொத்தம் 1,164 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. காலை 9 முதல் மாலை 4 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் இந்த முகாம்கள் நடைபெறும்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறவிருக்கிறது.
இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்படுகிறார்கள். எத்தனை சதவீதம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.