சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!
சென்னை: சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை 15.07.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வார்டிலும் இரண்டு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடத்தப்படுகிறது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் அவ்வப்போது அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுகளின்போது, தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கியத் துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்றும், குறிப்பாக சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள், விவசாய பெருமக்களின் கோரிக்கைகள், ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா சம்பந்தமான மனுக்கள் ஆகியவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, மு.க.ஸ்டாலின் இன்று (19.09.2025) சென்னை, தியாகராய நகர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 133-வது வார்டில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” இரண்டாவது முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களின் விவரங்கள் குறித்தும், முகாமில் செய்துதரப்பட்டுள்ள வசதிகளும் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த முகாமில், பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அட்டைகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவதையும், வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, உங்களுடன் ஸ்டாலின் முகாம் அலுவலர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி போன்றவை குறித்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தியாகராய நகர், 133-வது வார்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முதல் முகாமில் 852 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதே வார்டில் இரண்டாவது முகாம் இன்று நடைபெறுகிறது. மக்களிடம் முகாம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மக்கள், அரசுத் துறைகளின் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பாராட்டியதோடு, உடனடியாக மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதையும் வரவேற்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.