ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான்வேட்டை கும்பல் கைது
*நாட்டுத்துப்பாக்கி, டூவீலர்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ரேஞ்சர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர், நேற்று வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மருதடி சாவடி பகுதியில் சுற்றித் திரிந்த மர்மநபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவர்களில் ஒருவரிடம் நாட்டுத் துப்பாக்கி இருந்தது. அவரை சோதனை செய்தபோது பயன்படுத்தாத 14 தோட்டாக்களும், 3 காலி தோட்டாக்களும் இருந்தன.
மேலும் அந்தப் பகுதியில் மான் இறைச்சி, தோல், டிஜிட்டல் தராசு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், டூவீலர்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பிடிபட்டவர்கள் கூமாபட்டி கிழவன்கோயில் பகுதியைச் சேர்ந்த காசிமாயன் (43), மேலக்கோட்டையூர், வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (27), சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நிக்சன் சேவியர் (40), கிருஷ்ணன்கோவில் பாலாஜி நகரைச் சேர்ந்த ஸ்ரீதுர்காவேலன் (20), கான்சாபுரம் நல்லதம்பி (26) எனவும், தப்பிச்சென்றவர் கான்சாபுரம் செல்லப்பாண்டி என்பதும் தெரியவந்தது.
இந்தக் கும்பல் சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்து மான் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காசிமாயன் உள்ளிட்ட 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய செல்லப்பாண்டியை தேடி வருகின்றனர்.