கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி: முக்கிய சந்திப்புகளில் உறியடியும் கலக்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், நகரின் முக்கிய சந்திப்புகளில் உறியடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் போட்டி போட்டு கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆடிப்பூர கொட்டகையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நகரின் முக்கிய சந்திப்புகளில் உறியடி நிகழ்ச்சியும் நடைபெறும். இதன்படி இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில், தெய்வங்கள் முன் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதையொட்டி முன்னதாக ஆலிலை கண்ணன், ஆண்டாள், ரெங்கமன்னார், தவழும் கண்ணன் ஆகிய சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
வீதியுலாவின்போது நகரின் முக்கிய சந்திப்புகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உறியடி நடத்தினர். பின்னர் இரவு 10.30 மணியளவில் ஆண்டாள் கோயில் முன் அமைந்துள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆலிலை கண்ணன், ஆண்டாள், ரெங்கமன்னார், தவழும் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெங்கநாதபுரம் பகுதி இளைஞர்கள் போட்டிபோட்டு வழுக்கு மரம் ஏறினர். இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.