திருமலை நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாத சத்ரஸ்தாபன உற்சவம்
திருமலை: திருமலை ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாதம் உள்ளது. இதற்கு சத்ரஸ்தாபன உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 2வது நைவேத்தியத்திற்கு பிறகு, மங்கள நாதஸ்வர வாத்திய இசையுடன் பூஜை பொருட்கள், மலர், பிரசாதம் மற்றும் குடைகளுடன் கோயிலின் திருமாடவீதி வழியாக அர்ச்சகர்கள் நாராயணகிரி மலைக்கு சென்றனர். அங்கு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, அலங்கரிக்கப்பட்ட குடை நிறுவினர். பின்னர் பூஜை செய்யப்பட்டு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. வேதம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை நிகழ்த்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புராணங்களின்படி கலியுகத்தில், திருமலையின் 7 மலைகளில் மிக உயர்ந்தது நாராயணகிரி மலை. இந்த மலையின் உச்சியில் இருந்தபடி சீனிவாச பெருமாள், வைகுண்டத்தில் இருந்து பூலோகத்தில் முதலில் காலடி எடுத்து வைத்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், துவாதசியன்று சத்ர ஸ்தாபன உற்சவம் செய்வது வழக்கம். மேலும் இந்த காலகட்டத்தில் காற்று அதிகமாக வீசும். நாராயணகிரி மலையின் உச்சி அதிக உயரத்தில் உள்ளதால் காற்று அடிக்கடி வீசும். இதனால் வாயுதேவனை பிரார்த்தனை செய்து இங்கு ஒரு குடை நிறுவப்படுகிறது என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
ரூ.4.15 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 71,144 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,889பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் ரூ.4.15 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 26 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.