ஸ்ரீ சன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தை மூட உத்தரவு மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ஸ்ரீ சன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தில் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனத்தை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிப் சிரப் (பாராசிட்டமால், பீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரம் பெறப்பட்டது.கடந்த 1ம்தேதி அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிப் சிரப் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது. கடந்த 3ம்தேதி அன்றே, ஸ்ரீ சன் பார்மசியூட்டிகல், நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோல்ட்ரிப் என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட டை எதிலீன் கிளைகால் 48.6 % நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை கடந்த 7ம்தேதி மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது.
மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு கடந்த 9ம்தேதி அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (13ம்தேதி) ஸ்ரீ சன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.