ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி முர்மு இன்று தரிசனம்: பக்தர்களுக்கு தடை
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தரிசனம் செய்கிறார். இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் நிகழ்ச்சியை முடித்துகொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று (3ம்தேதி) காலை சென்னையில் இருந்து விமானப்படை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் அருகே நீலக்குடிக்கு வந்து மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்கள் கோவி.செழியன், கீதாஜீவன், திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு மாலையில் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு, 6மணிக்கு ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. ரங்கா ரங்கா கோபுர நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் அலங்கார தோரணமும், அவர் நின்று மக்களை சந்திக்க மேடை மற்றும் தற்காலிக அறை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் சென்று தரிசனம் செய்ய பேட்டரி கார் தயார் நிலையில் உள்ளது. ஜனாதிபதி செல்லும் இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், திருச்சியில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜனாதிபதி வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்ஐ, போலீஸ்காரர் சஸ்பெண்ட்
ஜனாதிபதி முர்மு வருவதால் ஸ்ரீரங்கம் கோயிலின் உள்ளே இருக்கும் வயதானவர்கள், ஆதரவற்றவர்களை போலீசார் வெளியேற்றினர். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்த மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த பாண்டிச்சாமி(68) என்பவரை 2 போலீஸ்காரர்கள் வெளியேற்றும்போது அவர்ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். தொடர்ந்து, அவரை வலுக்கட்டாயமாக போலீஸ்காரர்கள் இழத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து எஸ்எஸ்ஐ ரவி, போலீஸ்காரர் மணிகண்டன் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் காமினி நேற்று உத்தரவிட்டார்.