சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை: தமிழ் மின் நூலகத்தில் கணித மேதை சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட காலமாகப்பாதுகாத்துவைக்கப்பட்டிருந்த கணித மேதை சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப்படிகள், முதலமைச் வழிகாட்டுதலின்படி, மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன (https://tamildigitallibrary.in) என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் படிகள், 3 தொகுதிகளில் ஏறத்தாழ 700 பக்கங்களாக, இதில் இடம்பெற்றுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தின் கணிதத்துறைப் பேராசிரியர் இராகேஷ் கண்ணா, கையெழுத்துப் படிகளைப் பார்வையிட்டு, இப்படிகளுக்கென அறிமுகக் குறிப்பை எழுதியுள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகத்தை கலைஞர் 2001 பிப்ரவரி 17 அன்று தொடங்கிவைத்தார். அதன்கீழ் செயல்படும் தமிழ் மின் நூலகம் 2017 அக்டோபர் 11 அன்று பயன்பாட்டிற்கு வந்தது. கலை, இலக்கியம், அறிவியல், வரலாறு, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரும்பெரும் நூல்களும், பருவ இதழ்களும், ஓலைச்சுவடிகளும் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் இதுவரை மின்பதிப்பாக்கம் செய்யப்பெற்றுள்ளன. இம்மின் நூலகம் 17 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
அண்மையில் தகவல் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ள தமிழ் மின் நூலக உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின் நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மின் நூலகத்தில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அரிய நூல்கள், ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு எழுத்தாளர் விவரம் உள்ளிட்ட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், செப்டம்பர் 11 அன்று, அவரது நினைவு நாளை ஒட்டி மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது, கணித மேதை சீனிவாச இராமானுஜனின் கையெழுத்து பிரதிகள் (Hypergeometric Series, continued fractions, q-series, theta functions, Master Theorem for the evaluation of integrals, etc.,) மின் நூலகத்தில் ஒரு தனித் தொகுப்பாகப் பதிவேற்றம்பெற்றுள்ளன. சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் மின் பதிப்பாக்கம் செய்யப்பெற்று பதிவேற்றம்பெற்றதில் பங்குவகித்த ஆய்வாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் அமைச்சர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.