மண்டபம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு; : தங்கம் கடத்தலா? உளவுத்துறை தீவிர சோதனை
மண்டபம்: மண்டபம் அருகே, மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகை உளவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து படகுகளில் இலங்கைக்கு மாத்திரைகள், பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்துவதை தடுக்கவும், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இங்கு வருவோரை தடுக்கவும் கடலோர பாதுகாப்பு படையினர், உளவுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடலோரப் பகுதியில் படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், அங்கு சென்ற அதிகாரிகள் படகை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் இலங்கையை சேர்ந்த படகு என்பது உறுதியானது. இந்த படகு எப்போது வந்தது, அதில் வந்தவர்கள் யார், எத்தனை பேர் வந்தனர், அவர்கள் தங்க கட்டிகள் கடத்தி வந்தனரா, பயங்கரவாதிகளா? என பல்வேறு கோணங்களில் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த படகை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் இலங்கை படகு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.