இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 898 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு: சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
அதன்படி, சென்னை மண்டலத்தில் 76, சேலம் மண்டலத்தில் 128, வேலூர் மண்டலத்தில் 185, திருச்சியில் 79, நெல்லையில் 149, கோவையில் 114, ராமநாதபுரத்தில் 167 என்று மொத்தம் 898 நிலுவையில் உள்ள திருமணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த 898 தம்பதியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பதிவுக்கு வரும் நேர்வில் அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து முன்னுரிமை அளித்து திருமணங்களை பதிவு செய்ய வேண்டும்.
முகாமில் வாழும் இலங்கை தமிழர் தம்பதிகள் இருவரும் இந்துக்களாக இருப்பின் பதிவுத்துறையின் வலைதளமான tnreginet.gov.in மூலம் விண்ணப்பித்து பதிவுக்கு வரும் நேர்வில் முன்னுரிமை அளித்து திருமணம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக பரிசீலித்து பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மணமக்கள் இரு வேறு மதமாக இருப்பின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அறிவிப்பு வெளியிட்டு காலம் முடிந்த ஆவணங்களை பரிசீலனை செய்து திருமணத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நடந்த திருமணங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வரும் 26ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களை செயற்பாட்டில் வைத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு நடந்த திருமணங்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து நிர்வாக மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முகாமில் வாழும் இலங்கை தமிழர் தம்பதிகளின் திருமணங்கள் பதிவு செய்யப்படுவது குறித்த அறிக்கை எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட பதிவு மாவட்ட நிர்வாக மாவட்ட பதிவாளர்களிடமிருந்து அறிக்கை பெற்று ஒருங்கிணைந்த அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* 25, 26ம் தேதி சிறப்பு முகாம்
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த பத்திரப்பதிவுத்துறை உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி, வேலை நாட்களாக உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 26ம் தேதி (சனி) அன்றும், சனிக்கிழமை வேலை நாட்களாக இல்லாத இதர சார்பதிவாளர் அலுவலகங்களில் 25ம் தேதி (வெள்ளி) அன்றும் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பதிவுத்துறை தலைவரால் தொடர்புடைய பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.