இலங்கை தமிழ் அகதிகள் இந்திய குடியுரிமையை பெற முட்டுக்கட்டை: ஒன்றிய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015 ஜனவரி 9ம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட, அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும். அதற்கு வசதியாக இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு முதல் கட்டமாக நீண்டகால விசாவும், பின்னர் குடியுரிமையும் வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.