இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்: கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள், பறிமுதல் செய்த படகுகளையும் ஒன்றிய அரசு உடனே மீட்டு தர வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஆக.11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒன்றிய அரசை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினமான நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது. 78 ஆண்டுகள் நிறைவடைந்த சுதந்திர இந்தியாவில், 50 ஆண்டுகாலமாக சுதந்திரத்தை பறிகொடுத்து பரிதவிக்கும் மீனவர்களின் உரிமையை மீட்டுத்தரக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு வலுசேர்க்க காவிரி - வைகை - குண்டாறு பாசன கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம் தீவில் உள்ள நாட்டுப்படகு விசைப்படகு மீனவ சங்கத்தினர், கன்னியாஸ்திரிகள், வனிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக ஆக.19ம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதற்கு மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.